Tuesday, January 21, 2014

ஒரு வயசுப் பையனும் ஒரு வயசுப் பொண்ணும்..

                     எல்லாருக்கும் ஹேப்பி நியு இயர்!! டிசம்பர் மாசம் ஜாலியா கொஞ்சம் ஊர் சுத்தப் போயிட்டதால சரியா எழுத முடியல.. இனிமேல் பொறுப்பா இருக்க முயற்சி 'பண்றோம்'.. எங்க போனோம்னு கேக்கறீங்களா? அத இப்பவே சொல்லிட்டா எப்படி வரும் காலங்களில் பதிவ தேத்தறதாம்.. (பக்கத்துல கணேஷ் சிரிக்கிற சத்தம் உங்களுக்கு கேட்டிருக்க நியாயமில்லை)             
    
                    சமீபத்தில் இந்தியா சென்று வந்திருந்த ஒரு நண்பர் என்னிடம் "ஒரு வயசுப் பையனும் ஒரு வயசுப் பொண்ணும் ஒரு அறையில ஒரு மணி நேரம் தனியா இருக்க நேர்ந்தா என்ன ஆகும் ன்னு கேட்டார்." நான் பதிலுக்கு "இந்தியாவுலேன்னா ஒண்ணும் நடக்காது, இங்கே அஞ்சு நிமிஷத்துக்கு மேலே தாங்காது" என்று சொன்னேன். அதை கேட்டதும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு அவர் சொன்ன செய்தி கேட்டு மலைத்துப் போனேன். அப்படி அவர் என்னதான் சொன்னார்ன்னு கேக்கறீங்களா? சொல்றேன்..

                        சென்ற மாதம் முழுக்க பனிப்பொழிவும் குறைவான டேம்ப்ரேச்சரும் நீடிக்க ஒட்டு மொத்த அமெரிக்காவே நடுங்கிகிட்டு இருந்தது. சில வசதி குறைவான அபார்ட்மெண்டுகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் பனியை சுத்தம் செய்ய வருகிறார்கள். அங்கெல்லாம் வெளியே நடப்பதற்கே மிகவும் சிரமம் ஆகிவிடுகிறது. நியுயார்க்கில் இருக்கும் என் நண்பனின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கே பெரும்பாலான நேரம் காரை சுத்தப் படுத்தவும் முன் வாசலில் பனிக்கட்டிகளை அகற்றவுமே நேரம் சரியாக இருந்தது. அமெரிக்காவின் மேல் பாகத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் பனிக்காலத்தில் படும் அவஸ்தை இது. ரொம்ப நேரம் நின்றும் இந்தப் "பணியை" செய்ய முடியாது. காரணம் "ப்ராஸ்ட் பைட்" (Frost Bite).

                         இதயத்திலிருந்து நீண்ட தொலைவில் இருக்கும் கால் விரல்களுக்கு ஜீரோ டிகிரி செல்சியசுக்கும் குறைவான உறைபனிக் காற்றில் ஷு மற்றும் சாக்ஸ் அணிந்திருந்தாலும் ரத்த ஓட்டம் சீராக செல்லாது. அந்த சமயத்தில் கால் விரல்கள் சிவந்தும் லேசான வலியும் இருக்கும். இதுபோன்ற நேரத்தில் கால்களை உடனே சுடு நீரில் வைத்து குளிர்விப்பதும் தவறாகும். கொஞ்ச நேரம் விட்டு விட்டு கால் விரல்களை சூடு பறக்க தேய்த்து கொடுத்தால் மட்டுமே போதுமானது. உடனே மீண்டும் பனியில் நடப்பதை தவிர்த்தல் நலம்.

                         இந்த ப்ராஸ்ட் பைட் இரண்டு மூன்று நிலைகள் கொண்டது. முதல் நிலை தான் நான் மேலே சொன்னது. இரண்டாவது நிலையில் கால் விரல் நகங்கள் மற்றும் நுனிப் பகுதியில் சிவந்தும், பின்னர் கருத்தும் போய்விடும். அவ்வாறு மாறிய நிலையில் கை வைத்தியங்கள் ஒன்றும் பிரயோஜனப்படாது. மருத்துவரை அணுகுதலே சாலச் சிறந்தது. இதற்கு அடுத்த நிலையில் கால் விரல்கள் வீங்க ஆரம்பித்து பின் கால் விரல்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டி வரும் ஆகவே பனிக்காலத்தில் வெளியே செல்லும் அன்பர்கள் அதற்கு தகுந்த ஆடைகளும் பாதுகாப்பு சாதனங்களும் அணிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.

                              சரி இன்னைக்கு மெசேஜ் சொல்லியாச்சு, நண்பர் அப்படி என்ன சொன்னார் என்று கேட்க ஆவலாக இருப்பீர்கள். அவர் சொன்னது " 'ஒரு' வயசுப் பையனும் 'ஒரு' வயசுப் பொண்ணும்  ஒரு அறையில தனியா இருந்தா ஒரு மணி நேரம் இருந்தா கொஞ்ச நேரம் தவழ்வாங்க, அப்புறம் அழுவாங்க என்றாரே பார்க்கலாம்!! " சரி சரி அடிக்க வராதீங்க.. இதெல்லாம் சகஜமப்பா!!